ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் நகரம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மஸீர் பாத் பகுதி அருகே ஒருவர் தனது பைக்குடன் வெள்ளநீரில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அருகில் இருந்த ஒரு வாலிபர் துணிச்சலுடன் செயல்பட்டு அந்த நபரை காப்பாற்றினார். ஆனால் அந்த பைக் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் வேறு இரண்டு பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவமும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கானா டெவலப்மென்ட் பிளானிங் சொசைட்டியின் தகவலின்படி, மஸீர் பாத் பகுதியில் உள்ள பவுத்த நகர் கம்யூனிட்டி ஹாலில் 124 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதைப் தொடர்ந்து MCH காலனி, லைப்ரரி பில்டிங் பகுதிகளில் முறையே 118.5 மிமீ மற்றும் ஜவாஹர் நகர் ஹாலில் 114.3 மிமீ மழை பெய்துள்ளது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் கடுமையாக நீர் தேங்கி உள்ளது.

நகரில் ஏற்பட்ட சூழ்நிலையை நேரடியாக கண்காணிக்க பஞ்சாரா ஹில்ஸ் ரோடு எண் 12-ல் அமைந்த கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் பார்வையிட்ட GHMC மேயர் விஜயலட்சுமி கட்வால், “மழைநீரை தடுக்க, தண்ணீர் வேகமாக வெளியேற கூடுதல் மோட்டார்கள் பயன்படுத்த உத்தரவு கொடுத்துள்ளேன்” என X-இல் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் இந்திய வானிலை மையம், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனித்தனியாக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.