தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, த.வெ.க. தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 13ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தனது முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்த நிலையில், அந்த இடத்திற்கு அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, மரக்கடை பகுதியில் இருந்து பயணத்தை தொடங்க புதிய மனு அளிக்கப்பட்டது. இன்று காலை அளிக்கப்பட்ட மனுவுக்கு மாலை நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்கியது. எனினும், ரோடு ஷோ நடத்தக் கூடாது என்ற கண்டிப்பும் அதனுடன் சேர்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் தனது சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை மேற்கொள்ள உள்ளதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மூன்று முதல் நான்கு மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் நடைபெறவுள்ள நிலையில், 15 சனிக்கிழமைகளும், ஒரு ஞாயிற்றுக்கிழமையும் விஜயின் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முன் பிரச்சாரத்திற்கான இந்த பயணம், த.வெ.க.வின் முக்கியமான அரசியல் முயற்சியாகக் கருதப்படுகிறது.