தமிழக வெற்றி கழகத்தின் (தவெ க) இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு காரணமாக மாநாடு தொடர்பான முழுமையான விவரங்களை தவெக நிர்வாகத்திடம் கேட்டுள்ளது மதுரை மாவட்ட காவல்துறை.

மாநாட்டை நடத்துவதற்கான அனுமதிக்காக தவெகவின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்வைத்த மனுவில் முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாநாடு நடைபெறும் நேரம், இடம், அதன் உரிமையாளர்கள் யார், உரிய அனுமதி பெற்றுள்ளார்களா, மேடையின் அளவு, நாற்காலிகளின் எண்ணிக்கை, அலங்கார வளைவுகள், பேனர்கள் உள்ளிட்ட அனைத்து அலங்கார விஷயங்களின் விவரங்களையும் காவல்துறை கேள்வியாக எழுப்பியுள்ளது.

மேலும் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பேர் வருவார்கள் என்பதைப் பற்றியும், வருகை தரும் வாகனங்களுக்கு நிகரான நிறுத்துமிட வசதி செய்யப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் விரிவாகத் தகவல்களை கோரியுள்ளது. மாநாட்டு மேடைக்கு முக்கிய நபர்கள் செல்லும் வழித்தடங்கள், மருத்துவ வசதிகள், தீவிபத்து தடுப்பு ஏற்பாடுகள், உணவு வழங்கல் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் 20க்கும் மேற்பட்ட முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கான பதிலை விரைவில் வழங்க உள்ளதாக தவெக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாநாடு குறித்து தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.