இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை (Red Fort) மெட்ரோ ரயில் நிலையம் – கேட் எண் 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து, அப்பகுதியே பதற்றத்தில் மூழ்கியது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் எல்.என்.ஜே.பி (LNJP) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடித்த காரில் பற்றிய தீ, அருகில் நின்றிருந்த மேலும் இரண்டு கார்களுக்கும் பரவி, மொத்தம் மூன்று கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும், அருகில் இருந்த வீடுகள் குலுங்கியதாகவும், கடைகளின் கண்ணாடிகள் உடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு கார் ஒன்றில் சிஎன்ஜி கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகளும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாகும்.
