மத்தியப் பிரதேசத்தில் ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில், அந்த மருந்து தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து பல மாநிலங்களிலும் அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) அதிரடி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’, ‘ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்’, ‘ரீ லைஃப்’ எனும் மூன்று மருந்துகளையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்துகள் எங்காவது விற்பனை செய்யப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிந்தால், உடனடியாக WHO அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் இந்த எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் WHO வலியுறுத்தியுள்ளது.
