கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நேற்று காலை குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் குப்பை கிடங்கின் ஒரு பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிகிறது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுபற்றி அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீ அணைக்கும் பணியை வேகப்படுத்தி தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுபற்றி அப்போது மக்கள் கூறியதாவது, குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.