கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் 5-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகள் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அவ்வபோது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இடையே தான் படிக்கும் கல்லூரி தான் பெரியது என தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் பேருந்தில் சென்றனர்.

அப்போது தங்கள் கல்லூரியின் பெருமைகளையும், சிறப்பு அம்சங்கள் குறித்தும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த சக பயணிகள் கல்லூரிக்கு சென்று ஒழுகாக படியுங்கள் என அறிவுரை கூறினர். இதனையடுத்து கல்லூரி முடிந்து ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற மாணவிகள் திட்டக்குடி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது யார் கல்லூரி பெரியது? என அந்த 2 மாணவிகளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி தலை முடியை பிடித்து இழுத்து ஆபாசமாக திட்டி உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற பயணிகள் சொல்வதை மாணவிகள் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்த அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளை சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.