
பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு செய்திருந்தார். அதற்காக தன் பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். சில மணி நேரங்களில் தான் “ஹரித்துவாருக்கு செல்லவில்லை, வீட்டிற்கு திரும்பி வருகிறேன்” என்று தன் தந்தைக்கு மொபைல் மூலம் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அன்றிரவு ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்ட நிலையில் உடலில் பல காயங்கள் இருந்ததால் அடையாளம் காண முடியாத பட்சத்தில் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 30ஆம் தேதி நவ் ஜோத்தின் தந்தை தனது மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது அந்த அடையாளம் தெரியாத சடலம் நவ்ஜோத் தான் என்பது காவல்துறையினரால் உறுதி செய்யப்பட்டது.
அதன் பின் அவர்கள் நடத்திய விசாரணையில் நவ்ஜோத்தின் நண்பர் அமன்ஜோத் இவரிடமிருந்த ஐபோன் 11 என்ற மொபைலுக்காக அவரை கொலை செய்ததும், பின்னர் தனது நண்பன் உதவியுடன் ரயில் நிலையத்தில் சடலத்தை கொண்டு போட்டதும் தெரியவந்தது. மேலும் அமன்ஜோத்தை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.