கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் நார்த்தங்காடு பகுதியில் விவசாயியான தங்கவேல்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தகுமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்வதற்காக தனது தந்தையுடன் மொபட்டில் கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த மொபட்டை தங்கவேல் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிட்டாம்பாளையம் 4 ரோடு பகுதியில் தங்கவேல் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து அதிவேகமாக வந்து மொபட் மீது பயங்கரமாக மோதியது. மேலும் மொபட் பேருந்திற்கு அடியில் சிக்கி 2 பேரும் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டனர். இதனை பார்த்ததும் பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் அலறி சத்தம் போட்டனர். இதனால் டிரைவர் உடனடியாக பேருந்து நிறுத்தினார். இதனையடுத்து தந்தை, மகன் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கவேல் மற்றும் நந்தகுமாரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் செல்வம்(60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.