கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பத்மஜித் – நீது (31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நீது என்பவர் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக அருகிலுள்ள தனியார் அழகு சாதன மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் கொழுப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நீது வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு அவருடைய கணவர் தொடர்பு கொண்டார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர் இல்லை என்று பதில் வந்தது.

இதைத்தொடர்ந்து நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவருடைய கணவர் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது ” நீதுவின் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை. எனவே இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்று மருத்துவர்கள் கூறினார்.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் 5 விரல்களும், கையில் 3 விரல்களும் அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதுவின் கணவர் கொழுப்பு அகற்றம் செய்வதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாகத்தான் தனது மனைவி இந்த நிலைக்கு வந்து விட்டார் என்று கூறி தனியார் அழகு சாதன மருத்துவமனையின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனையின் உரிமையாளரை கைது செய்தனர். அதோடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனை மூடப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.