பாரிஸ் நகரத்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், விளம்பர அழகியுமானவர் எம்மா வாட்சன். இவர் பிரபல ஹாரி பாட்டர் படத்தின் மூலம் உலக பிரபலம் அடைந்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 8 ஹாரி பாட்டர் படங்களில் நடித்துள்ளார். தனது 10 வயது முதல் நடிக்க வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்தார்.
அப்போது கடந்த ஆண்டு ஆக்ஸ்போர்ட் நகரத்தில் 48 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காரை எம்மா ஓட்டி சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில் எம்மா வாட்சனுக்கு 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தடைவிதித்தும், இந்திய மதிப்பின்படி ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
