
கன்னியாகுமரி மாவட்டம், கீரிவிளை கிராமத்தை சேர்ந்த பாலபிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். பாலபிரபு, கவுரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் சென்னையில் வசித்து வந்த நிலையில், கவுரி பல்லாவரத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பாலபிரபு தனது மனைவி, குழந்தை மற்றும் மாமனார் கந்தசாமியுடன் சொந்த ஊரான கீரிவிளைக்கு சென்றிருந்தார். அங்கு அருகிலுள்ள பல சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று காலை பாலபிரபு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பாலபிரபு மற்றும் அவருடைய மாமனார் கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குழந்தை கவிதா மற்றும் கவுரி படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுரியையும், குழந்தை கவிகாவையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கௌரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.