ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய iPhone 17 தொடரைப் பெறுவதற்கு உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், இந்தப் புதிய மாடலை உடனடியாக வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, உள்ளூர் மொபைல் கடைக்காரர்கள் பழைய iPhone 12-ஐ iPhone 17 ஆக மாற்றும் புது வித்தையைக் கையாண்டு வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளமான X-ல் வைரலாகி, 1.2 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த மாற்றத்திற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதை “போலி ப்ரோ மேக்ஸ்” என விமர்சித்து வருகின்றனர்.

வைரலான அந்த வீடியோவில், ஒரு கடைக்காரர் iPhone 12-ஐ எப்படி iPhone 17 ப்ரோ மேக்ஸ் போல மாற்றுகிறார் என்பதை விளக்குகிறார். காரின் வெளிப்புற உடலை மாற்றி, iPhone 17 தொடரில் உள்ள பிரகாசமான ஆரஞ்சு நிறத்தைப் பூசி, கேமரா மற்றும் ஃபிளாஷ் லைட்டிற்கு புதிய வடிவமைப்பு சட்டத்தைப் பொருத்துகிறார்.

ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் வெளிப்புற அழகு மட்டுமே; உள்ளே எந்த தொழில்நுட்ப மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், புதிய iPhone 17-ல் கேமராவுக்கு அருகில் ஃபிளாஷ் இல்லாத வடிவமைப்பைப் பின்பற்றி, பழைய ஃபிளாஷ் மறைக்கப்பட்டதால், அது இயங்காது என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“இது மோசடிக்கு வழிவகுக்கும்” என எச்சரிக்கும் வகையில், இந்த மாற்றத்தை “போலியான ப்ரோ மேக்ஸ்” என விமர்சித்து, மக்கள் ஏமாற வாய்ப்புள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.