விளம்பர நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய டீன் ஏஜ் பயனாளர்கள் தரவுகளின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க இருப்பதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது. சமூகவலைத்தளங்களில் இளைய சமூகத்துக்கு  காட்டப்படும் விளம்பரங்களின் வகைகளை கட்டுப்படுத்த சமூகஊடகத்தளங்கள் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்.

தகாத விளம்பரங்கள், தவறான உள்ளடக்கத்தை போன்று அவர்களை திசை திருப்பவும், தீய வழியில் இட்டுச்செல்லும் பணியையும் செய்யும் என சோஷியல் மீடியா வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்காக மெட்டா நிறுவனமானது இந்த புது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மெட்டா நிறுவனம் வெளியிட்டு உள்ள மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், பிப்ரவரி மாதம் முதல் விளம்பரதாரர்களுக்கு பயனர்களை குறிவைக்கும் ஒரு வழியாக பயனரின் பாலினம் (அ) அவர்கள் பார்க்கும் போஸ்டுகளின் தரவுகளை பார்க்க இயலாது.

பயனர்களின் வயது மற்றும் இருப்பிடம் மட்டுமே  பயன்படுத்தப்படும் என  தெரிவித்து உள்ளது. அதேபோன்று பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்திலும் உள்ள அமைப்புகளுக்கு சென்று சில வகையான விளம்பரங்களை தவிர்க்கும் (அ) குறைவாக பார்க்கும் ஆப்ஷனை  தேர்வுசெய்ய இளைஞர்களுக்கு உதவும் புது கட்டுப்பாடுகள் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

பொதுவாக விளம்பரதாரர்கள், பயனாளர்கள் பார்க்கும் போஸ்டுகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் விளம்பரங்களை அமைப்பர். இதற்கிடையில் தவறான விளம்பரங்களால் பதின் வயதுடையவர்களை குறிவைப்பதை தடுக்கும் கட்டுப்பாடுகளை மெட்டா இதன் வாயிலாக சேர்த்து உள்ளது. இதன் காரணமாக பதின்ம வயதினர் அவர்கள் வயதிற்கு ஏற்ற விளம்பரங்களை மட்டும் காணும் வாய்ப்பை பெறுவர். இதனால் விளம்பரங்கள் வாயிலாக அவர்கள் திசை மாறுவது தடுக்கப்படுமென மெட்டா நிறுவனமானது தெரிவித்துள்ளது.