கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஜெயக்குமார் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் இதுவரை நான் சம்பாதித்த பணம் அத்தனையும் சூதாடி தொலைத்து விட்டேன். இனிமேலும் நான் உயிரோடு இருந்தால் உங்களால் சந்தோஷமாக வாழ முடியாது. எனவே நான் சாகப் போகிறேன் யாரும் வருத்தப்பட வேண்டாம் என எழுதியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.