கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நேற்று பகவதியப்பன் மட்டும் வீட்டிற்க்கு  திரும்பினார். அப்போது வீட்டின் கதவை திறந்த போது அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் வீட்டின் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதோடு பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

அதாவது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் பதற்றத்துடன் மாடிக்கு சென்று தான் வைத்திருந்த லாக்கரை பார்த்தார். ஆனால் அங்கு லாக்கர் இல்லை. அதில் சுமார் 200 பவுன் நகையும் 12 லட்சம் ரொக்கப் பணமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய்கள் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின்  காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.