மும்பை அந்தேரி மேற்கு பகுதியிலுள்ள கபாஸ்வாடியில், நாம் அன்றாடம் பருகும் பாலில் உயிர் கொல்லி வேதிப்பொருட்களைக் கலந்து விற்பனை செய்த ஒரு கும்பலை உள்ளூர் மக்கள் அதிரடியாகப் பிடித்துள்ளனர். ஒரு லிட்டர் அசல் பாலுடன் தண்ணீர், டிடர்ஜென்ட் பவுடர் (சோப்புத்தூள்), யூரியா, சோப்பு கரைசல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, இரண்டு லிட்டர் போலிப் பாலாக மாற்றியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோவில், ஒரு சிறிய அறைக்குள் பால் பாக்கெட்டுகளைக் குவித்து வைத்து, அந்த நபர் போலிப் பால் தயாரிக்கும் முறையைச் செய்து காட்டுவது பார்ப்போரைக் குலைநடுங்க வைத்துள்ளது.
View this post on Instagram
இந்தக் கும்பல், அங்கீகரிக்கப்பட்ட பால் மையங்களிலிருந்து வரும் அசல் பாக்கெட்டுகளைத் திருடி, அவற்றைப் பிரித்து வேதிப்பொருட்களைக் கலந்து மீண்டும் புதிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்துள்ளது.
இத்தகைய போலிப் பாலைத் தொடர்ந்து குடிப்பதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு, குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
“பல ஆண்டுகளாக இந்த மோசடி நடப்பதாகத் தெரிந்தும் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது அந்தப் பகுதி மக்கள், உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் போலீஸார் உடனடியாகத் தலையிட்டுத் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
