டெல்லி மெட்ரோ ரயில் இப்போது பயணத்திற்கான இடமாக மட்டுமல்லாமல், விதவிதமான ‘டிராமா’க்களின் களமாகவும் மாறி வருகிறது. சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்த ஒரு முதியவர் தங்களை முறைத்துப் பார்ப்பதாகக் கூறி அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

அந்த இளைஞர் ஆவேசமாகப் பேச, பதிலுக்கு அந்தப் பெரியவர் சிரித்துக் கொண்டே, “ஏன் தம்பி, நீ என்ன பெரிய டைகர் ஷெராஃபா? உன்னை முறைத்துப் பார்க்க?” எனக் கேட்க, ரயிலில் இருந்த மற்ற பயணிகள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.’

பெரியவரின் பதிலைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், “ஏன் என் நண்பரை இப்படி முறைக்கிறீர்கள்?” எனத் தொடர்ந்து சண்டையிட்டார். அதற்கு அந்தப் பெரியவர் அசால்ட்டாக, “மேடம், அப்போ உங்களை முறைத்துப் பார்க்கச் சொல்கிறீர்களா?” எனக் கேட்க, ரயிலே சிரிப்பால் அதிர்ந்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் மரியாதையின்றிப் பேசத் தொடங்கியதும், “உன் வீட்டில் அப்பாவை இப்படித்தான் பேசுவாயா?” எனக் கேட்டு அந்தப் பெரியவர் அடக்கியது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நகைச்சுவையும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த மெட்ரோ சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.