தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அழகாபுரியில் மாரியப்பன் மகன் கணேசன் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இவர் தனது குடும்பத்தினரை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் மன உளைச்சலில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி கடந்த 6 மாதங்களாக கணேசன் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கணேசன் வீட்டில் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கணேசனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ரத்த வாந்தி எடுத்து கணேசன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.