இந்தியாவில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசானது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pmay) திட்டத்தை சென்ற 2015 ஆம் வருடம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022-க்குள் சுமார் 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என்று இலக்கு தீர்மானிக்கப்பட்டது. இப்போது இந்த திட்டத்தின் காலம் 2024ம் வருடம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையோருக்கு வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் இந்த திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதை ஆய்வு மேற்கொவதற்கு மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியது.

மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு இன்னும் மானியம் வழங்கப்படாமல் இருக்கிறது. இதனால் மேற்குவங்க அரசு மத்திய அரசுக்கு இதுபற்றி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பிரதமர் ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிதியை உடனடியாக வழங்கவில்லை எனில் 11.5 லட்சம் வீடுகள் கட்டுவதற்குரிய பணிகளை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க முடியாது என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதோடு கடுமையான நிதி நெருக்கடி இருந்தபோதிலும் மாநில அரசு சார்பில் இத்திட்டத்தின் கீழ் 40 சதவீத செலவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக  கூறப்பட்டு உள்ளது.