மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் விசாரணையின் தொடக்கத்தில் அவர் பொய்யான தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து தீவிர விசாரணையின் இறுதியில் நாராயண சிங் வங்கி பணத்தை மோசடியாக கையாடல் செய்துள்ளதும் அதில் பெரும் அளவிலான பணத்தை மந்திரஜால மூலம் இரட்டிப்பாகுவதாக கூறி நபரிடம் கொடுத்து ஏமாந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் மீதான வங்கி பண மோசடி வழக்கை விசாரித்து வந்த இந்தூர் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. அப்போது நாராயணன் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்து வங்கி பணத்தை மோசடி செய்வது என்பது பொதுமக்களுக்கு எதிரான நேரடியான குற்றம். அதனால் இது போன்ற மோசடி சம்பவங்களில் குறைந்தபட்ச தண்டனை வழங்குவது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் எனக் கூறி நாராயண சிங்கிற்கு ஆயுள் தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.