விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 11 கிலோ மீட்டர் நடந்து சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் குந்த்பானி பகுதியில் கஸ்தூர்பா காந்தி மகளிர் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய உணவை சாப்பிடவும், கழிவறைகளை தூய்மை செய்யவும் கட்டாயப்படுத்தப்படுவதாக மாணவர் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மேலும் கடும் குளிரில் வெறும் பாய் மட்டுமே கொடுத்து மாணவிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் விடுதி வார்டனால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் 60-கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் இருந்து வெளியேறி சாய்பாசாவில்  உள்ள  ஆட்சியகரத்தை நோக்கி நடக்க தொடங்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று திங்கட்கிழமை காலை ஆட்சியகரத்தை மாணவிகள் அடைந்துள்ளனர். அதன் பின் விடுதி வார்டனுக்கு எதிரான தங்களது குற்றச்சாட்டுகளை துணை ஆணையர் அனன்யா மிட்டலிடம் முன் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் மாணவிகள் நடந்து வந்ததை கேட்டறிந்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் துணை ஆணையரின் உத்தரவின் பெயரில் ஆட்சியகரத்திற்கு வந்த மாவட்ட கல்வித்துறை கண்காணிப்பாளர் அபய்குமார் ஷில் மாணவிகளின் புகாரை கேட்டு அறிந்து கொண்டார். இதனையடுத்து விடுதி வார்டனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய அபய் குமார் மாணவிகளை மீண்டும் வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் மாணவிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.