டெல்லியில் 2 நாட்களாக நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது சில முக்கியமான ஆலோசனைகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் 10 மாநிலங்களின் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக செயற்குழு கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி திரைப்பட விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என்று அறிவுரை வழங்கியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும்.

அதன் பிறகு திரைப்படங்கள் குறித்த தலைவர்களின் கருத்தால் அரசின் திட்டங்கள் செய்திகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்று பிரதமர் மோடி கூறியதாக சொல்லப்படுகிறது. அதாவது அண்மையில் பதான் திரைப்படத்தின் பேஷ் யங் பாடல் வெளியான போது அதில் தீபிகா படுகோனே காவிநிற உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். தீபிகா படுகோனே காவிநிற உடை அணிந்து கொண்டு ஆபாசமாக கவர்ச்சி நடனம் ஆடியதாக பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்காவிட்டால் பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் எச்சரித்தனர். இந்த விவகாரம் செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இதன் காரணமாக தான் பிரதமர் மோடி திரைப்பட விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.