2023 உலக கோப்பையின் 7வது போட்டியில் வங்கதேச அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

2023 உலக கோப்பையின் 7வது போட்டியில் இன்று காலை 10:30 மணிக்கு தர்மசாலாவில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தது. அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கி அதிரடியாக விளையாடியது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், 115 ரன்களுக்கு தான் முதல் விக்கெட் விழுந்தது. பேர்ஸ்டோ 59 பந்துகளில் 8 பவுண்டரி உட்பட 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து சேர்ந்த ஜோ ரூட் – டேவிட் மலான் ஜோடியும் அதிரடியாக ஆடியது. இந்த ஜோடியும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, டேவிட் மலான் சதமடித்தார். அதன் பின் அதிரடியாக ஆடிய மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 140 ரன்களும் விளாசி அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 400 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து வந்த ஜாஸ் பட்லர் 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 40வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதேபோல் ஜோ ரூட் கடந்த போட்டி போல இந்த போட்டியிலும் சிறப்பாக 68 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 82 ரன்கள் விளாசிய நிலையில், ஷோரிபுல் இஸ்லாமின் 42வது ஓவரில் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அடுத்த பந்தில் லிவிங்ஸ்டோன் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து ஹாரி புரூக் 20,  சாம் கரன் 11, கிறிஸ் வோக்ஸ் 14, அடில் ரஷித் 11 என பின் வரிசை வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. மார்க் வுட் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடிய போதிலும், பின் வந்த பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 400 ரன்களை எட்ட முடியவில்லை.. ஆனாலும் 364 என்பது கடினமான ஸ்கோர். இலங்கை அணியில் அதிகபட்சமாக மஹேதி ஹசன் 4 விக்கெட்டுகளும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், டஸ்கின் அகமது மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து வங்கதேச அணியில் துவக்க வீரர்களான லிட்டன் டாஸ் மற்றும் தன்சித் ஹசன் இருவரும் களமிறங்கினர். இதில் ரீஸ் டாப்லி வீசிய இரண்டாவது ஓவரின் 4வது பந்தில் தன்சித் ஹசன் 1 ரன்னிலும், தொடர்ந்து 5வது பந்தில் ஷாண்டோ டக் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறினர். அதன்பின் ஷகிப் அல் ஹசன் (1) ரீஸ் டாப்லியின் 6வது ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார். அதனைத்தொடர்ந்து மெஹிதி ஹசன் 8 ரன்னில் வெளியேற   வங்கதேச அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் துவக்க வீரர் லிட்டன் தாஸ் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் சேர்ந்து பொறுப்பாக ஆடி ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் லிட்டன் தாஸ் (66 பந்துகளில் 76 ரன்கள்) அரைசதம் கடந்த நிலையில்,  ஆட்டம் இழந்தார். இதனைத்தொடர்ந்து அரைசதமடித்த முஷ்பிகுர் ரஹீம் 51 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து டவ்ஹித் ஹ்ரிடோய் 39 ரன்கள் அடித்து வெளியேறினார். இதையடுத்து வந்த மஹேதி ஹசன் 14, ஷோரிபுல் இஸ்லாம் 12, டஸ்கின் அகமது 15, என ஆட்டமிழக்க வங்கதேச அணி 48.2  ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. கடந்த போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்ற நிலையில், முதல் வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி.. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 4 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்..