இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த கிரிக்கெட் வீரர் என்ற அரிய பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.

2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தர்மசாலா மைதானத்தில் இன்று காலை 10:30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் அதிரடியாக சதம் விளாசினார். இப்போட்டியில், அவர் 91 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் தனது 6வது சதத்தை அடித்தார். அவர் 107 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்தார்.

அதேசமயம் இந்தப் போட்டியில் ஜோ ரூட் 68 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 82 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் புதிய சரித்திரம் படைத்தார். உலகக் கோப்பைப் போட்டிகளில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த கிரிக்கெட் வீரர் என்ற அரிய பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரகாம் கூச்சின் சாதனையை முறியடித்தார். கிரகாம் கூச் 21 போட்டிகளில் 897 ரன்கள் எடுத்தார்.. ஜோ ரூட் தனது 19வது உலகக் கோப்பை போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்..

ஜோ ரூட் 19 போட்டிகளில் 917 ரன்கள் எடுத்தார். ஒருநாள் உலகக் கோப்பையில் 900 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் இவர்தான். கூச், 1979 மற்றும் 1992 க்கு இடையில் விளையாடிய 21 போட்டிகளில் 897 ரன்கள் எடுத்திருந்தார்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த முதல் 5 கிரிக்கெட் வீரர்கள் :

1. ஜோ ரூட்- 917

2. கிரஹாம் கூச்- 897

3. இயன் பெல்- 718

4. ஆலன் லாம்ப்- 656

5. கிரேம் ஹிக்- 635

இங்கிலாந்து வெற்றி :

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 68 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 82 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோ (59 பந்துகளில் 52; 8 பவுண்டரி) சிறப்பாக செயல்பட்டார். ஜோஸ் பட்லர் (20), ஹாரி புரூக் (20), சாம் கரன் (11) குறைந்த ரன்களில் பெவிலியன் அடைந்தனர். லியாம் லிவிங்ஸ்டோன் (0) டக் அவுட்டானார். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 26-40 ஓவர்களுக்கு இடையில் 149 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் ஸ்கோர் 400ஐ எளிதில் தாண்டும் எனத் தோன்றியது. 

ஆனால், கடைசி 10 ஓவர்களில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிக்கனமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட குறைவான ரன்களை எடுத்தது. வங்கதேச அணியில்  மெஹ்தி ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஷரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷகிப் அல் ஹசன், தஸ்கின் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய வங்கதேச அணி 48.2  ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 66 பந்துகளில் 76 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 64 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர்.. மேலும் டவ்ஹித் ஹ்ரிடோய் 39 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

https://twitter.com/JoeRoot66Fan/status/1711687786129133879