திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர். முதல்வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்தார். இந்நிலையில் 3கட்ட பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி உள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும். திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை, எந்த சிக்கலையும் யாரும் ஏற்படுத்தவும் முடியாது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு திமுக தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.