தெற்காசிய நாடுகளிலேயே கல்வி அறிவில் பாகிஸ்தான் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அண்மை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தானின் கல்வியறிவு விகிதம் வெறும் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்து தற்போது 63 சதவீதத்தை எட்டியுள்ளது.
24 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் இத்தகைய மந்தமான முன்னேற்றம் அந்த நாட்டின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் என உலக வங்கி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் கல்வியறிவு 68 சதவீதமாக இருக்கும் நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் 49 சதவீதமாக மிகவும் பின்தங்கியுள்ளது.
ஆண்களில் 73 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கும் அதே வேளையில், பெண்களில் 54 சதவீதம் பேர் மட்டுமே கல்வி கற்றவர்களாக இருப்பது பாலின இடைவெளியையும் சமூக ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பாகிஸ்தானின் இந்த கல்வி வீழ்ச்சிக்கு அந்நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியே முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக பொதுமக்கள் தங்களது வருமானத்தில் பெரும் பகுதியை உணவு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்காகவே செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பல ஏழை குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியைக் கைவிட்டு அவர்களை வேலைக்கு அனுப்பும் சூழல் உருவாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்நாட்டு அரசு கல்விக்காகச் செலவிடுவதை விட, பொதுமக்களே தங்களது சொந்தப் பணத்தை அதிக அளவில் கல்விக்காகச் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 2 கோடி குழந்தைகள் இன்னும் பள்ளிக்குச் செல்லாமல் வீதியில் இருப்பதாகவும், கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமேயான ஒன்றாக மாறி வருவதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
