பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதோடு நிர்மல் குமார் அண்ணாமலையை 420 மலை என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது டெல்லிக்கு பெரும் பிரஷ்ஷரை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மத்தியில் ஆளும் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படியாவது ஆட்சியை கொண்டுவர வேண்டும் என அதற்கான காய்களை நகர்த்தி பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை நிலைநிறுத்தியதோடு கூட்டணி அமைத்தும் வெற்றியை பெரும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாததால் பல மாநிலங்களை சேர்ந்த முக்கிய புள்ளிகளை தமிழகத்திற்குள் களம் இறக்கி ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளை செய்து வருகிறது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இப்படி அதிமுகவில் இருப்பவர்கள் பாஜகவில் இணையும்போது பாஜகவை சேர்ந்தவர்களை மட்டும் அதிமுக சேர்த்துக் கொள்ளக் கூடாதா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. ஓபிஎஸ், சசிகலா போன்றோரை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி நிர்மல் குமாரை அதிமுகவில் சேர்த்து செந்தில் பாலாஜிக்கு டஃப் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறிய நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடந்த சில விஷயங்கள் மற்றும் தற்போது நடக்கும் சில விஷயங்களை வைத்து பார்க்கும் போது கூட்டணியில் விரிசல் விழுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.