தமிழ்நாட்டில் டாஸ்மாக் மற்றும் மது ஆலைகளில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றச்சாட்டை எழுப்பியதை தொடர்ந்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை பாஜக பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறது” என்றார். மேலும், இதுவரை அந்த ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டிற்கான எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை தெளிவாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜகவின் அரசியல் பாய்ச்சல் செல்லாது எனவும் அவர் கூறினார்.
மேலும், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக, தமிழகத்தின் கல்வி நிதியை மத்திய அரசு மறுக்கிறதா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய 100 கோடி ரூபாயை பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். பாஜக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராட தயாராக இருந்தால், அவர்களின் கட்சி ஒற்றை இலக்க ஆதரவிலிருந்து இரட்டை இலக்க ஆதரவுக்குத் தேறாதவர்கள் என்று அவர் கிண்டலாக பேசினார். ஆனால், “பாஜகவிற்கு தமிழக மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை” என்றும், அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக தவறான வழியில் போராடிக்கொண்டு இருப்பதாகவும் விமர்சித்தார்.
இது போன்ற நடவடிக்கைகளால், அமலாக்கத்துறை பாஜகவால் அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுவதாக மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். “எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை” என்று கூறிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த தவறுக்கும் இடமளிக்க மாட்டார்” என உறுதியளித்தார். தமிழகத்தில் டெல்லி பாணியில் அரசியல் செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் எதுவும் ஆதாரமில்லாதவையாகவே முடிவடையும் என்றும் அமைச்சர் ரகுபதி தனது பேட்டியில் தெரிவித்தார்.
