
திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை ராஜா சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளை ஏற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் சபீர் முகமது, லோகநாதன் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூணாண்டிபட்டியில் சென்றபோது பின்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் ராஜா உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் ஏற்றி வந்த 100 கோழிகளும் உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான வேன் மற்றும் இறந்த கோழிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.