திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 15 பேர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். அந்த வேனை சுப்பையா என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் வனப்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு சுற்றுலா இடங்களாக கண்டு ரசித்தனர். இந்நிலையில் கொடைக்கானல் பைன் மரக்காடு பகுதியில் வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் கீழே இறங்கினர். அந்த வேனில் சுப்பையாவும் ஒரு சிலரும் அமர்ந்திருந்தனர். இதே போல விழுப்புரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றொரு வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

அந்த வேனை கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பைன்மரக்காடு பகுதியில் வந்த போது கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற மற்றொரு வேன் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் தூத்துக்குடி சுற்றுலா பயணிகள் வந்தவன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ரவீந்திரன், தனலட்சுமி உள்பட 20 சுற்றுலாப் பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 20 பேரையும் மீ அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.