2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்த நிலையில், சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டு நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நீண்டகாலமாக ஓரிடத்தில் வசிக்காதவர்கள், ஒரே நபர் இரண்டு இடங்களில் பெயர் வைத்திருப்பது மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் குறித்த விவரங்கள் மாவட்ட வாரியாக இணையதளங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெயர் விடுபட்டவர்கள் அல்லது பிழைகள் உள்ளவர்கள் அதனைச் சரிசெய்ய மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விவரங்களைப் பூர்த்தி செய்யும்போது ஏற்பட்ட சிறு தவறுகளால் தங்களது வாக்குரிமை பறிபோயிருக்குமோ என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், வரைவுப் பட்டியலை முறையாகச் சரிபார்த்து உரிய படிவங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், அதற்கு முன்னதாக இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.