
திருவாரூர் நகர் பகுதியில் செல்வ கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை இருந்ததால் அதனை சரி செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பட்டாவிலுள்ள பிழையை திருத்துவதற்காக மனு கொடுத்த போது வருவாய் முதுநிலை ஆய்வாளர் ஜான் டைசன் என்பவர் ரூ.15000 லஞ்சம் கேட்டுள்ளார். அதனை கேட்டு செல்வகணேஷ் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் செல்வகணேஷிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து ஜானிடம் கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர். அதன்படி செல்வகணேஷ் ஜானிடம் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து ஜானை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.