கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இரு இளைஞர்கள் அவர்களைத் தகாத வார்த்தைகளால் வர்ணித்துப் பேசியுள்ளனர்.
இளைஞர்களின் இந்த அநாகரிகச் செயலால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் அவர்களை அப்படியே விட்டுவிடாமல் துணிச்சலுடன் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் அருகே அந்த இளைஞர்களைப் மடக்கிப் பிடித்த பெண்கள் உனது அக்கா அல்லது அம்மாவை இப்படிப் பேசுவாயா என்று ஆவேசமாகக் கேட்டு அவர்களைச் சரமாரியாகத் தாக்கினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஆர்த்தி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது தங்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் பேசிய அந்த நபர்களைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற நோக்கில் விரட்டிச் சென்றதாகத் தெரிவித்தார்.
பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய இழிவான செயல்களைக் கண்டு அஞ்சி ஒதுங்கிப் போகாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மகளிர் தினம் வரவுள்ள நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமானது என்றும் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். பெண்களின் இந்த அதிரடிச் செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டியுள்ள நிலையில் இது குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
