சமீபத்தில் வெளியாகி மக்களை அதிகமாக கவர்ந்த தமிழ் படங்களில் ஒன்றுதான் லவ் டுடே. அதில் கதாநாயகர் எப்போதும் செல்போனை பயன்படுத்துவதற்காக அவரது தாயார் கதாநாயகனை வசை பாடுவார். சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயம் பலவீனமாகும். பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் குழந்தை பிறக்காது என்று கதாநாயகனின் தாயார் கூறும்போது அனைவரும் கைதட்டி சிரித்தாலும் அனைவருக்குள்ளும் இந்த பயம் எப்போதும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

மனிதனின் மூன்றாவது கை போல ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் அறிவை வளர்த்துக் கொள்வதிலிருந்து வியாபாரம் செய்வது பணம் செலுத்துவது குடும்பத்துடன் தொடர்பில் இருப்பது என்று மக்கள் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் சந்தோஷமாக கழிக்கவும் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். இவ்வாறு பல நன்மைகள் இருந்தாலும் ஸ்மார்ட்போனின் மூலம் எதிர்மறை விளைவுகளும் அதிகம் இருக்கத்தான் செய்கிறது.

தேவைக்கான பயன்பாடு என்பதை தாண்டி தற்போது ஸ்மார்ட் போனை பலர் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். செல்போன் உடலுக்கு கேடு விளைவிக்குமா? இது உண்மைதானா? என்றால் ஸ்மார்ட்போனை அதிக பயன்படுத்துவர்களில் பெரும்பாலானோருக்கு அதனால் உடலில் ஏற்படும் கேடு என்ன என்பது நன்றாக தெரியும். இருப்பினும் அப்படி செல்போனை தன்னுடனே வைத்திருப்பவர் அதனை தங்களின் சட்டை பாக்கெட் அல்லது பேண்ட் பாக்கெட்டுகளில் பத்திரப்படுத்துகின்றனர்.

இன்றைய நாகரீக வாழ்க்கை முறையில் பெண்களின் உடைகளிலும் பாக்கெட்டுகள் வந்துவிட்டதால் இந்த பாதிப்பிற்கு அவர்களும் ஆளாக நேரிடுகிறது. இவ்வாறு உடலுடன் நெருக்கத்தில் இருக்குமாறு ஸ்மார்ட்போனை வைக்கும் போது அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது உடலில் இருக்கும் திசுக்களையும் உயிரணுக்களையும் பாதிக்கும் என்றும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு, இருதய நோய் போன்றவற்றையும் பெண்களுக்கு மார்பகம் மற்றும் இதர பாகங்களில் புற்றுநோய் போன்றவற்றையும் விளைவிக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.