இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்பும் நிலையில் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதோடு ரயில்வே நிர்வாகம் சார்பில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முன்பு வரை மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா காலத்தில் அது நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா முடிவடைந்து மீண்டும் ரயில்கள் பழையபடி இயங்கிய நிலையிலும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் கொண்டுவரப்படவில்லை.

இதனால் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை கொண்டு வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்களில் சலுகைகள் வழங்கப்படும் என தற்போது இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு கட்டண சலுகை வழங்கப்படும் என்று விவரத்தை வெளியிடவில்லை. மேலும் கொரோனாவுக்கு முன்பு வரை அனைத்து வகுப்புகளிலும் பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இதில் பெண்களுக்கு சலுகை பெற குறைந்தபட்ச வயது வரம்பு 58 ஆகவும், ஆண்களுக்கு 60 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.