
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட போவதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு காஞ்சிபுரத்தில் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் திமுக பவள விழாவின் போது வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை திமுக அமைச்சர்கள் பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதாவது துணை முதல்வர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு துரைமுருகன் அதைப் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். ஏற்கனவே சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறிய நிலையில் அதற்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு கொடுத்தார். உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் துரைமுருகனுக்கும் அவருக்கும் இடையே சலசலப்பு நிலவி வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இதற்கிடையில் திமுக மூத்த அமைச்சர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் தற்போது துரைமுருகன் உதயநிதிக்கு துணை முதல் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆகி அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். மேலும் இதனால் திமுக மேல் இடத்திற்கும் துரைமுருகனுக்கும் இடையே ஏதோ சலசலப்புகள் இருப்பது போன்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.