சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை நீல வழித்தட மெட்ரோ சேவை இயக்கப்பட இருக்கிறது. இதை கிளாம்பாக்கம் வரை நீடிப்பதற்கு முடிவு செய்த நிலையில் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. அதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் ஏராளமான மேம்பாலங்கள் இருக்கிறது.

இதனால் இங்கு மெட்ரோ வழித்தடத்தை உயர் மட்ட பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் பாலங்கள் இடையூறாக இருப்பதால் அவற்றை இடிக்க நேரிடும். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதால் அதற்கான மாற்று வழியை கண்டறிந்த பிறகு தான் மெட்ரோ பணியை தொடங்க முடியும். குறிப்பாக தாம்பரம், குரோம்பேட்டை, சானடோரியம் ஆகிய பகுதிகளில் உள்ள நடைபாலங்களை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை சரி செய்த பிறகு தான் ஜிஎஸ்டி சாலையில் எப்படி நீல வழித்தடத்தை அமைப்பது என்பது குறித்து திட்டமிட முடியும். மேலும் இதனால்தான் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ பணிகளை தொடங்குவதற்கு காலதாமதம் ஆகிறது.