
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டம் கத்ரா பஜாரில் வசிக்கும் முகமது ஷெரீஃப் என்பவர், தனது மகளின் திருமணத்திற்காக வரதட்சணையாக ஏர் கூலர், டிவி, ரெஃபிரிஜரேட்டர் மற்றும் சலவை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியிருந்தார்.
கடந்த அக்டோபர் 2022-ல் திருமணம் முடிந்த பிறகு, கோடைக்காலத்தில் அந்த கூலரை இயக்கிய போது, அது திடீரென வேலை செய்யாமல், மோட்டார் எரிந்துவிட்டது. கூலருக்கு 5 வருட உத்தரவாதம் இருந்தும், கடைக்காரரும், உற்பத்தியாளரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஷெரீப் நுகர்வோர் மன்றத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கு குறித்து வழக்கறிஞர் பவன் நன்ஹோரியா கூறியதாவது, ஷெரீஃப் அவர்கள் ஏபி சேல்ஸில் வாங்கிய கூலர் பழுதடைந்ததாகவும், அது சம்மர் கூல் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தயாரிப்பு எனவும் கூறியுள்ளார்.
மேலும், கூலர் பழுது அடைந்தது குறித்து கடையில் கேட்டப்போது, தாங்கள் தயாரிப்பு நிறுவனமல்ல என சொல்லி தட்டிக்கழித்தனர். இதனால், ஏபி சேல்ஸும், உத்தரபிரதேசம் காஜியாபாத்தில் உள்ள உற்பத்தி நிறுவனமும் இருவருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டது.
4 வருட விசாரணைக்குப் பிறகு, நுகர்வோர் மன்றம் ஏபி சேல்ஸ் குற்றமற்றது என தீர்மானித்து, உற்பத்தியாளரான சம்மர் கூல் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்திடம் ஊதியம் மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
அதன் கீழ், கூலரை மீட்டு, ரூ.8700 வாங்கிய விலையை திருப்பிச் செலுத்தவேண்டும் எனவும், மேலும் நுகர்வோரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியதற்கு ரூ.3000 மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.2000 வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, நுகர்வோர் உரிமையை உறுதிபடுத்தும் வகையில் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.