உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் உடல்களை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த பாரூக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பாரூக்கின் மனைவி தாஹிரா (35), மகள்கள் ஷரீன் (14) மற்றும் அப்ரீன் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக அவர்கள் மாயமானதைத் தொடர்ந்து, கிராமத் தலைவர் அளித்தப் புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த பயங்கரக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போலீஸ் விசாரணையில், புர்க்கா அணியாமல் தனது தாய் வீட்டிற்கு மனைவி சென்றதால், தனது ‘கௌரவம்’ பாதிக்கப்பட்டதாகக் கருதி பாரூக் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பே மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தவர், சமயம் பார்த்து மனைவியையும் குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

பின்னர் உடல்களை வீட்டிற்குள்ளேயே புதைத்து மறைத்துள்ளார். போலீசார் வீட்டைத் தோண்டி மூன்று உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலையாளியிடமிருந்து பிஸ்டல் மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.