பப்புவா நியூ கினியா (Papua New Guinea) அணியின் சர்வதேச விக்கெட் கீப்பர்-பேட்டரான கிப்லின் டோரிகா (Kiplin Doriga), கொள்ளை வழக்கில் (Robbery Charges) தான் குற்றவாளி என்று ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) உலகக் கோப்பை சேலஞ்ச் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜெர்சி தீவில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி நள்ளிரவு செயிண்ட் ஹெலியரில் (St. Helier) உள்ள ஹிலாரி தெருவில் (Hilary Street) தனது ஹோட்டலுக்குத் திரும்பும் வழியில், டோரிகா ஒரு தனிப் பெண்ணைத் தாக்கி, தரையில் தள்ளி, அவரது மொபைல் போனைப் பறித்துச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்டப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் டோரிகா உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 27 அன்று ஜெர்சியின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (Magistrate Court) குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு, தற்போது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 30 வயதான டோரிகா, இதற்கு முன் டென்மார்க் மற்றும் குவைத் அணிகளுக்கு எதிராக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
