கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் செந்தில் நகரில் சி.பழனிச்சாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள்(71) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜேந்திரன், செந்தில் முருகன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் பழனிச்சாமி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவராகவும், சோமனூர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.கடந்த 19-ஆம் தேதி உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனிச்சாமி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அறிந்த கருப்பாத்தாள் சுயநினைவை இழந்து திடீரென மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கருப்பாத்தாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கணவன், மனைவி இரண்டு பேரின் உடல்களும் அய்யம்பாளையத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது. இவர்களது இறுதி ஊர்வலத்தில் சங்க நிர்வாகிகள், விசைத்தறி உரிமையாளர்கள் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.