கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் அனுசியா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, கவுன்சிலர்கள் கதிரேசன், செண்பகவள்ளி, நீலாவதி, வீர பத்திரப்பிள்ளை, காசி, பெருமாள், வசந்தி, கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தங்களது வார்டு பகுதிகளில் ஓராண்டு காலமாக மக்கள் பிரச்சனை எதுவும் தீர்க்கப்படவில்லை என விவாதம் நடத்தியுள்ளனர்.

மேலும் இளநிலை பொறியாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மக்கள் பிரச்சினைகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தை விட்டு வெளியேறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வீர பத்திரப்பிள்ளை, செண்பகவள்ளி, கதிரேசன், காசி, பெருமாள், சுரேஷ் ஆகிய 6 பேரும் கலந்து கொண்டனர். மேலும் பொறியாளர் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க ஒத்துழைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.