கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராகுல்ராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடலூரில் இருக்கும் அரசு ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த வாகனத்தை ராகுல்ராஜின் சகோதரர் ஜீவன்ராஜ் புதுச்சேரி நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் ஜீவன்ராஜ் சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து ஜீவன்ராஜ் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளும் சேதமானது.

இதுகுறித்து ராகுல்ராஜ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து காப்பீடு தொகையை கேட்டுள்ளார். ஆனால் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ராகுல்ராஜ் கோரிக்கை நிராகரித்தது. இது குறித்து ராகுல்ராஜ் கடலூர் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 1 லட்ச ரூபாய் அபராதம், வாகனத்தை பழுது பார்ப்பதற்கு 9 1/2 லட்சம், வழக்கு செலவு தொகை 25 ஆயிரம் என மொத்தம் 10 3/4 லட்ச ரூபாய் பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.