
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் ரோகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித்துக்கு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அன்பு, அமைதி செழிக்க வேண்டி இந்த தம்பதியினர் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் செய்ய முடிவு எடுத்தனர்.
அதன்படி கடந்த 4- ஆம் தேதி இரண்டு பேரும் தனி தனி சைக்கிள்களில் ஜபல்பூரிலிருந்து புறப்பட்டு மராட்டியம், கர்நாடகா, கேரள மாநிலம் வழியாக கடந்த வாரம் கோவைக்கு வந்தனர். இதனையடுத்து இந்த தம்பதியினர் மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு செல்லவிருக்கின்றனர். இது குறித்து தம்பதியினர் கூறியதாவது, நாடு முழுவதும் அன்பு, அமைதி செழிக்க வேண்டி யாத்திரை செல்ல முடிவு எடுத்தோம்.
அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 11 மணி வரை சைக்கிளில் செல்வோம். இதனையடுத்து 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஓய்வு எடுத்து விட்டு இரவு 8 மணி வரை சைக்கிளில் செல்கிறோம். அடுத்த வாரம் கன்னியாகுமரிக்கு சென்று அங்கிருந்து தூத்துக்குடி, ராமேஸ்வரம், தஞ்சை, திருவண்ணாமலை வழியாக கர்நாடகா, ஆந்திரா செல்ல உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.