வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் போக்ஸாநகர்  சட்டமன்ற தொகுதி மற்றும் தன்பூர் சட்டமன்ற தொகுதி என 2 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.போக்ஸாநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக தஃபஜ்ஜால் ஹொசைன் 34,146 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

2ஆம் இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் மிசான் ஹொசைன் 3,909 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் எம்டி: செலிம் 181 வாக்குகளும்,  சுயேச்சை வேட்பாளர் ரத்தன் ஹோசன் 144 வாக்குகளும், நோட்டாவுக்கு 434  வாக்குகளும் கிடைத்தன.அதே போல தன்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிந்து தேப்நாத் 30, 017 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கௌசிக் சந்தா 11, 146  வாக்குகளுடன் 2ஆம் இடத்திலும், சுயேச்சை வேட்பாளரான அனில் ரியாங் 544 வாக்குகளுடனும்,சுயேச்சை வேட்பாளரான பப்பி தேப்நாத் 426 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். நோட்டாவுக்கு 533 வாக்குகள் கிடைத்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட திரிபுராவில் தன்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக 70.35% வாக்குகளும், போக்ஸாநகர் சட்டமன்ற தொகுதியில் 87.97% வாக்குகளும் எடுத்த மாபெரும் வெற்றி பெற்று அசத்தி உள்ளது.