தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. இவரின் காமெடிக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி. டாக்டர், அண்ணாத்தே, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி. அதோடு பல படங்களை தன் கைவசம் வைத்து நடித்து வருகிறார். “லெக்பீஸ்” எனும் பெயரில் தயாராகும் படத்தை ஸ்ரீநாத் இயக்கி வருகிறார்.

இந்த படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடிக்க கிங்ஸ்லியை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் லெக்பீஸ் திரைப்படத்தில் கிங்ஸ்லி சில நாட்கள் மட்டும் நடித்துவிட்டு மீதி காட்சிகளில் நடிக்க மறுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மணிகண்டன் புகாரளித்துள்ளார்.

அதில் “லெக்பீஸ் படத்தில் 10 நாட்கள் நடிப்பதற்கு சம்பளம் பேசி கிங்ஸ்லியை ஒப்பந்தம் செய்தோம். எனினும் அவர் 4 நாட்கள் மட்டுமே நடித்தார். அதற்குரிய சம்பளத்தையும் பெற்றுக் கொண்டார். இதற்கிடையில் மீதி நாட்கள் நடிக்க மறுத்து வருகிறார். ஆகவே அவருக்கு வழங்கிய சம்பளத்தையும் தயாரிப்பு செலவுக்கான நஷ்ட ஈடு தொகையையும் வாங்கி தரவேண்டும்” என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.