இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை 14 ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அடுத்ததாக 31 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்குவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகம் பயன்பெறும் வகையில் 7 திட்டங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சென்னை முதல் மைசூர் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் வரையும் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயங்கி வருகிறது.

இதைத்தொடர்ந்து பெங்களூரு-கோவை, பெங்களூரு- கன்னியாகுமரி, சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி, சென்னை எழும்பூர்- மதுரை, சென்னை சென்ட்ரல்- எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல்- செகந்திராபாத், சென்னை சென்ட்ரல்- விஜயவாடா ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் அடுத்ததாக இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக பெங்களூர்-கோவை வந்தே பாரத் ரயில் சேவை முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் சென்னையை அடுத்த இரண்டாவது பெரிய நகரமாக கோயம்புத்தூர் இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டது.

தற்போது கோயம்புத்தூர் முதல் பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுவதால் வர்த்தக ரீதியாக பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் நிரம்பி வழியும் நிலையில், வந்தே பாரத் ரயில் சேவைகள் மூலம் புதிய நிறுவனங்கள் கோவைக்கு திரும்பினால் வளர்ச்சி என்பது நிச்சயமாக வேற லெவலில் இருக்கும்.