அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் மணிவாசகன் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு சிப்காட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் விசாகன் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வந்த நிலையில் மணிவாசகன் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் கடன் வாங்கியும் சூதாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 50 லட்சம் வரை பண இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊருக்கு சென்று இருந்த அருணா நேற்று காலை தன்னுடைய கணவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிலையில் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் அவர் அருகில் இருப்பவர்களிடம் தொடர்பு கொண்டு தன் கணவரை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது மணிவாசகன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி ஓசூர் அட்கோ காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் ஒரு தற்கொலை கடிதம் சிக்கியது. அதில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து 50 லட்சம் வரை கடன் இருக்கிறது. இந்த கடனை செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.