தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. உணவு வழங்கள் துறை அமைச்சர் சக்கராபாணி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தற்போது தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, தமிழக அரசு 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது தென்னை விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் கடனாளியாக இருப்பதால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். எனவே தமிழக அரசு பாமாயில் கொள்முதல் செய்யும் ஒப்பந்த புள்ளியை ரத்து செய்ய வேண்டும். மேலும் இனி ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.